பிரித்தானியாவில் கல்வி பயின்று வரும் இலங்கையைச் சேர்ந்த சிரோமினி சற்குணராஜாவை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரோமினியையும் அவரது தாயையும் இன்றைய தினம் நாடு கடத்த பிரித்தானிய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரோமியும் அவரது தாயும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாரகள் எனவும் தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் யுவதியை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி பிரித்தானியாவில் கையெழுத்துப் போராட்டம்:-
Feb 26, 2017 @ 18:55
இலங்கை தமிழ் மாணவியை இலங்கைக்கு நாடு கத்த வேண்டாம் எனக் கோரி பிரித்தானியாவில் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஆயிரக் கணக்கானவர்கள், இந்த மகஜரில் கையொப்பங்களை இட்டுள்ளனர்.
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சிரோமினி சற்குணராஜா, கடந்த எட்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார். மின்சார பொறியில் பட்டக் கற்கை நெறியை கற்று வரும் சிரோமினி இந்த ஆண்டு தனது பட்டக் கல்வியை பூர்த்தி செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிரோமினி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு மாணவர் வீசாவில் சிரோமினி பிரித்தானியாவிற்குள் பிரவேசித்ததாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தந்தையின் அணுசரணையின் அடிப்படையில் பிரித்தானியாவிற்குள் சிரோமினி பிரவேசித்ததாகவும், எனினும் அவரது தந்தை கடந்த 2011ம் ஆண்டு உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மாணவர் விசாவில் பிரவேசித்த சிரோமனி, புகலிடக் கோரிக்கையாளராக மாறிய நிலையில் அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி உள்துறைச் செயலாளரிடம் மகஜர் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மகஜருக்கு ஆயிரக் கணக்கான கையெழுத்துக்களும் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை இரவு வரையில் இந்த மகஜரில் 11500 பேர் கையொப்பிட்டுள்ளனர். நாடு கடத்தப்படுவதனை தடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என சிரோமினி தெரிவித்துள்ளார்.