ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் காவல்துறைக்கு உத்தரவு இட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ,
குறித்த படுகொலை சம்பவம் இடம்பெற்று ஒரு சில நாட்களில் , குறித்த படுகொலை சம்பவத்துடன் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு தொடர்பு இருக்கின்றது எனவும் , அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் , அவரே படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் எனவும் யாழில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலருக்கும் , ஊடக நிறுவனங்கள் சிலதுக்கும் மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பப்பட்டு உள்ளது அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் கொலை சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தவேளை, ஒரு பெண் மற்றும் ஒரு நபரும் சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்து உள்ளனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் எந்த அடிப்படையில் விடுதலை செய்தனர், என்பது தொடர்பிலும், விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். என படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஸ் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதேவேளை முச்சக்கர வண்டியை நீதிமன்றில் பரப்படுத்தாது எந்த அடிப்படையில் காவல் துறையினர் விடுவித்தனர் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். என மன்றில் சட்டத்தரணி கோரி இருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு இட்டார்.
இதேவேளை குறித்த வழக்கினை குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு பாரம்கொடுக்குமாறு சட்டத்தரணி கே. சுகாஸ் கோரிய போது , அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என கருதுவதனால் அதனை தொடர்ந்து காவல்துறையினரே விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிவான் தெரிவித்தார்.
குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என முஸ்லீம் இளைஞர் ஒருவரது படத்துடன் சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.