குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவத்தின் கண்கண்ட சாட்சியமான சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியிலும், மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யபட்டார்.
அந்த படுகொலை சம்பவத்தை கண்ணால் கண்டேன் என 12 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தார். அதனை அடுத்து கடந்த 22ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் 16 பேர்களுக்கு மத்தியில் இரு சந்தேக நபர்களையும் தெளிவாக அடையாளம் காட்டி இருந்தார்.
அந்நிலையில் குறித்த சிறுவனுக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்து விட்டு தப்பி சென்று உள்ளார் என சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாயார் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 22ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் எனது மகன் இருவரையும் அடையாளம் காட்டி இருந்தார். அன்றைய தினம் மாலை மோட்டார் சைக்கிளில் நீல நிற தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் எனது மகனை அழைத்து உனது கழுத்தை வெட்டுவேன் என சைகை மூலம் கூறி விட்டு தப்பி சென்று உள்ளார்.
அதனை எனது மகன் எனக்கு அன்றைய தினமே கூறினார். தற்போது மகனின் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரை எனது வீட்டுக்கு அழைத்து தங்க வைத்துள்ளேன். தற்போது அவரது பாதுகாப்பில் வீட்டிலேயே மகன் இருக்கின்றார். எனது மகனின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு மகனை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்ப்பதற்கு விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சிறுவனுக்கு படுகொலை நடந்து இரண்டு நாட்களில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி இருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் சிறுவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனை அடுத்து சாட்சியத்திற்கு கொலை அச்சுறுத்தல் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு நீதிவான் உத்தரவு இட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.