தெற்காசியாவுக்கான பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரௌலட் மற்றும் அவரின் குழுவினர் இந்தியாவுக்குள் நுழைய குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் கோரியுள்ளது.
பிபிசி செய்தியாளரின் புலிகள் சரணாலயத்தில் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் விதமாக அமைந்திருந்த வன் வேர்ல்ட்: கில்லிங் ஃபார் கன்சர்வேஷன் ( one world killing for conservation ) என்ற ஆவணப்பட்த்தின் உருவாக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அஸாமின் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களுக்கெதிராகத் தொடங்கப்பட்டுள்ள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் இந்த ஆவணப்படம் அமைந்திருந்தது. அப்படத்தில், காண்டாமிருகத்தை வேட்டையாடுபவர்களைச் சுடுவதற்கு காவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், ரௌலட் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும் ஆவணப்படம் எடுத்துள்ளார் எனவும் இதன்மூலம் அவர் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்த விதிமுறைகளை மீறிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.