ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இரண்டாண்டு கால அவகாசம் வழங்கும் என எதிர்பார்ப்பதாக நல்லிணக்க இணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புதிய தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இணை அனுசரணையுடன் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறு பிரித்தானியா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.