செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை 10-க்கு மேல் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித் துள்ளார். கடந்த நவம்பர மாதம் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததனைத் தொடர்ந்து இது தொடர்பான ஒரு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்ட ரூபாய் தாள்களை 10-க்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் எனவும் அதற்கு 10 ஆயிரம் ரூபா அல்லது கையிருப்பில் உள்ள தொகையைப் போல 5 மடங்கு அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆய்வு நோக்கத்துக்காக 25 நோட்டுகள் வரை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு கடந்த பெப்ரவரி 27ம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதனைத் தொடர்ந்து இந்த மசோதா சட்டமாகி அமுலுக்கு வந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.