இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின்போது, முக்கிய சாட்சியாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன மன்றில் முன்னிலையாகாத காரணமாக குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன மன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது