வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், புலனாய்வுப் பிரிவினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு நேரடியாக தாம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 14,000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் எனவும் இவர்களை கண்காணிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் போராளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ளாவிட்டால் , அவர்கள் மீளவும் வன்முறைப் பாதையில் பயணிக்கக்கூடிய சாத்தியமுண்டு என சுட்டிக்காட்டியுள்ள கருணா பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட நாட்டில் மீளவும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்க இடமளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.