நியாயம் கிடைக்கும் வரை சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி மீனவர்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்கின்றது.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ, கடந்த 6ம் திகதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயம் முன்பு அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உறுதிமொழியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டுமென உறுதியளித்ததன் பின்னரே பிரிஜ்ஜோ உடலை வாங்குவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர் போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்கள், பெண்கள் என பலரும் தங்கச்சி மடத்தில் திரண்டு வருகின்ற அதேவேளை தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் எனவும் எதிர்வரும் 11ம்,12ம் திகதிகளில் ; நடைபெறும் கச்சத்தீவு ஆலய திருவிழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.