நுவரெலியா மாவட்டத்திலுள்ள டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
டொரிங்டன் தோட்டத்திற்குரிய, கல்மதுரை பிரிவின் 06ம் இலக்க தோட்டக் குடியிருப்பைச் சார்ந்த ஒரு குடியிருப்பானது அண்மைக் கால மழை காரணமாக தாழ்ந்து போயுள்ள நிலையில், அங்கு குடியிருந்து வருகின்ற 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 பேரினது நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 1926ம் ஆண்டுக் காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பு வீடுகளில் கடந்த காலங்களில் புனரமைப்புப் பணிகள் எதுவும் இடம்பெறாத நிலையில், இங்குள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதாகவும், இதனால் இம் மக்கள் பாரிய அச்ச நிலையிலேயே இரவு வேளைகளைக் கழித்து வருவதாகவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.