மருமகனை பார்ப்பதற்காக நான்கு இலட்சம் கொடுததேன் ஆனால் இன்றுவரை பார்க்கவேயில்லை, பணம் வேண்டியவர்கள் காட்டவில்லை எனவும் அவர்களும் இங்குதான் இருக்கின்றார்கள் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி அல்லது ஆஞ்சி அவர்களின் மாமி தங்கவேல் சத்தியதேவி வயது 69 தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 22 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
உங்கள் மருமகன் ஆஞ்சியை விடுலை செய்வதற்கு இருபது இலட்சம் செலலழிக்க வேண்டும் (அவர் தற்போதும் விசுவடுவில் இருக்கின்றார்) பல உயர் மட்டங்களுடன் பேசவேண்டும் ஆஞ்சி இரகசிய இடம் ஒன்றில் இருக்கின்றார் எனத் தெரிவித்தார்.
நான் அவரிடம் இருபது அல்ல எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனது மருமகன் ,மகள் ,பிள்ளைகள் எங்கு இருக்கின்றார்கள் என்று காட்டுங்கள் என்றேன். அதற்கு அவர் மறுபடியும் பார்க்க வேண்டும் என்றாலும் ஒரு நான்கு இலட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்றார்.
நான் 2009-09-19 அன்று தனியார் வங்கி ஒன்றில் என்னிடம் தொடர்பு கொண்டவர் குறிப்பிட்ட மற்றொரு நபரின் பெயருக்கு நான்கு இலட்சம் ரூபாவை வைப்புச் செய்தேன், அதற்கான வங்கியின் சிலீப் கூட என்னிடம் தற்போதுள்ளது. பின்னர் அவர்கள் என்னை திருகோணமலைக்கு வருமாறு அழைத்தனர் அங்கு சென்ற போதும் அவர்கள் சொன்னது போன்று எதுவும் நடக்க வில்லை இதன்பின்னரே நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என உணர்ந்தோம் எனத் தெரிவித்த சத்தியதேவி.
2009-05-18 ஆம் திகதி வட்டுவாகல் ஊடாக செல்வபுரத்திற்கு நான் எனது மகள் மகாலிங்கம் சிவாஜினி, மருமகன் சின்னத்தம்பி மகாலிங்கம் (இளம்பரிதி,ஆஞ்சி) பேரப்பிள்ளைகளான ம.மகிழினி, ம.தழிளொளி, எழிலினி காணாமல் ஆக்கப்பட்ட போது குழந்தைகளின் வயது முறையே 10 வயது,08 வயது, 03வயது ஆகும்.
நாங்கள் ஆறுபோர் ஆமி கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது ஆமி ஒருவன் என்னை தட்டி அம்மா நீங்கள் போங்கோ நாங்கள் இவர்களை விசாரித்து விட்டு அனுப்புகின்றோம் என தன்னுடைய கொச்சை தமிழில் சொன்னான் . இதன்போது என்னுடை மகள் இவ அம்மா எனக் கூற அவர் வயது போனவர் எனக் கூறிவிட்டு என்னை ஏனைய பொது மக்களுடன் அனுப்பிவிட்டார்கள்.