யுத்தக் குற்றச் செயல்களுக்கான பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். படையினர் நிரபராதிகள் என நிரூபிக்கும் நோக்கில் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றிருந்த கோதபாய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் இதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளுமா என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த அறிக்கைகளை பயன்படுத்தி அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு தெளிவான பதிலை அளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
துரதிஸ்டவசமாக இன்று அரசாங்கம் படையினரை பாதுகாக்க முயற்சிக்கவில்லை எனவும், அன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுடப்பட்டவர்களே இன்று மனித உரிமை சாம்பியன்களாக திகழ்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்போர் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களே யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வலையமைப்புக்களில் பிரபாகரன் புனிதராக தெய்வமாக போற்றப்பட்டு வருவதாகவும் எவரும் அவருக்கு எதிராக கருத்து வெளியிடுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்சவையும் படையினரையும் தம்மையும் கொலைகாரர்களாக சமூக ஊடக வலையமைப்புக்கள் சித்தரிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் துர்ப்பாக்கியமான நிலையை நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.