புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக்கத் தேரர் தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் நிறுவனம் பணியில் ஈடுபட்டிருந்தால் இலங்கையர்கள் கடற் கொள்ளையர்களிடம் சிக்கியிருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனம் சட்டவிரோதமானது என உலகிற்கு பிரச்சாரம் செய்யாமல் இருந்திருந்தால் இலங்கை கப்பல்கள் மட்டுமன்றி உலகின் எந்தவொரு நாட்டினதும் கப்பல்கள் கடற் கொள்ளையர்களிடம் சிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புலானாய்வுப் பிரிவினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை சிறையில் அடைத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர் யுத்தத்தில் சிறந்த முறையில் கடமையாற்றி தங்கப் பதக்கம் வென்ற தம்மிக்க அனில் ஒபா என்ற படைவீரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரவிராஜை கொலை செய்ய கோதபாய ராஜபக்ஸ உத்தரவிட்டார் என கூற வேண்டுமென அழுத்தம் கொடுத்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் குற்றவாளிகளை நிராபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.