சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், விசாரணை ஆணைக்குழுக்களாலும், ஐ.நா அறிக்கைகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய வேளை ஜோசப் முகாம் எனும் சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்தவரும் தற்போது பிரேஸிலுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றி வருபவருமான ஜகத் ஜயசூரிய மற்றும் 4ஆம் மாடியில் சித்திரவதைப் பிரிவிற்கு இயக்குனராக இருந்தவரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருக்கும் சிசிர மென்டிஸ் ஆகியோரையே இடைநிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்துக்கு நிறைவேற்றுப் பணிப்பாளராக யாஸ்மீன் சூகா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.