யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, உள்நாட்டு நீதிமன்ற சட்டங்களுக்கு அமைய மாத்திரமே தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் ஒற்றுமை இல்லை எனவும், வலது கை செய்வது இடது கைக்கு தெரியாத நிலையே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கைக்கு தற்போது அவசியமற்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும், மஹிந்தவின் அரசாங்கத்தின் காலத்தில் இது தொடர்பில் அசமந்தமாக இருந்தமையே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும் அது உள்நாட்டு விதிமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பிரச்சினைகளுக்கு சர்வதேச தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.