பாகிஸ்தானில் காணாமல் போன 2 இந்திய முஸ்லிம் மதகுருமார்களும் இன்று நாடு திரும்புவரென தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த 2 முஸ்லிம் மதகுருமார்களும் இன்று நாடு திரும்புவார்கள் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து காணாமல் போன சையது ஆசிஃப் நிஜாமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் திங்கள்கிழமை டெல்லி திரும்ப உள்ளதாக தெரிவித்ததாகவும் இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள மசூதி ஒன்றின் 80 வயதான தலைமை இமாம் சையது ஆசிஃப் நிஜாமி தனது உறவினரான நஜீம் அலி நிஜாமி என்பவருடன் தனது சகோதரியை பார்ப்பதற்காக கடந்த 8-ம் திகதி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்ற நிலையில் கடந்த 14ம் திகதி முதல் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரையும் மீட்டுத் தருமாறு பாகிஸ்தானிடம் இந்தியா விடுத்த கோரிக்கைகமைய இருவரும் கராச்சியில் பத்திரமாக இருப்பதாக சனிக்கிழமை மாலையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
இந்த இருவரும் சிந்து மாகாணத்தில் உள்ள தொலைதூர பகுதியில் இருந்ததாகவும் அங்கு தொலைத் தொடர்பு இணைப்பு கிடைக்காததால், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.