திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து இன்று திங்கள்கிழமை 16வது நாளாக சுழற்சி முறையிலான கிழக்கு மாகாண ஆளுநர் பணி மனையின் முன்னே உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலை இவர்கள் திடீரென எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் வீட்டின் முன்னே காணாமல் போனோரை கண்டு பிடித்துத் தருமாறும், அவர்கள் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் பேசுவதற்காக அவரது வீட்டின் முன்னே கூடியிருந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த சம்பந்தன் இரவு வீடு திரும்பியதும் போராட்டக்காரர்களை உள்ளே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தையினை மேற்கொண்டுள்ளார். இதன்போது இவர்களின் போராட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது, எனவும், பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வலியுறுத்தப் போவதாகவும் சாதகமான பதிலை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் பேச்சசுவார்த்தையில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேச்சு வார்த்தை முடிவடைந்த பின்னர், அவர்கள் மீண்டும் ஆளுநர் பணிமனை பகுதியை சென்றடைந்து தமது சுழற்சி முறையிலான உண்ணா விரதத்தினை தொடர்ந்து வருகின்றனர்.