தமது தொழிலை செய்து, ஒரே குடும்பமாகவும் செல்வந்தராகவும் வாழ்ந்த தங்கள் ஊரை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது என கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த தாயொருவர் தெரிவித்துள்ளார். 20ஆவது நாளாகவும் தமது கிராமத்தை மீட்க கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்கள் சார்பில் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தாங்கள் வீதிகளில் அனாதைகளைப் போல கைவிட்ட நிலையில் வாழ்கின்றோம் என்றும் இந்த அரசாங்கம் ஏனென்றும் தங்களைத் திரும்பியும் பார்க்கவில்லை என்றும் அத்தாய் குறிப்பிட்டார். தமது நிலங்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்ததாகவும் அரசாங்கமும் ஜனாதிபதியும் கேப்பாலவு மக்களுக்கு வஞ்சனை செய்து வருவதாகவும் தெரிவித்த அவர், எதற்காக இவ்வாறு எம்மை துன்புறுத்துகின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார். தாங்களும் எங்கள் வருங்கால சந்ததியும் என்ன பாவம் செய்தோம் என்பதுதான் தங்களுக்குத் தெரியவில்லை என்றும் உருக்கம்பட கூறினார்.
மேலும் தாங்கள் இந்த தெருவிலே இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் இதற்கு சகல அரசியல் கட்சிகளும் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர் வர்த்தக சங்கம், கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் ஒவ்வொரு தமிழரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமது சொந்த இடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி தம்மை மீள்குடியேற்றம் செய்ய அரசாங்கம் உடனடியாக முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள்இ பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.