கிழக்கில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டப்படுத்துவது தொடர்பான அவசரக் கூட்டமொன்று இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
மாகாண சபைக்ககட்டடத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மாகாண சபையின் தவிசாளர்,மாகாண அமைச்சர் ,மாகாண சபை உறுப்பினர்கள்,தலைமைச்செயலாளர்,முதலமைச்சின் செயலாளர் ,சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் போது கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாயும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது டெங்கு ஒழிப்பு செயற்பாட்டின் போது ஆளணி மற்றும் வாகனப் பற்றாக்குறைகள் இருப்பின் அவற்றை உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து டெங்கு ஒழிப்பை துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் டெங்கு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிரான எவ்வித தயவு தாட்சணையும் இன்றி கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் கிழக்கு முதலமைச்சர் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்,
கிழக்கு மாகாண சபை அமர்வு இடம்பெற்றுவந்த நிலையிலேயே அதனை ஒரு மணி நேரம் ஒத்திவைத்து இந்தக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது