டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதியை வழங்க உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பணிப்பரை விடுத்துள்ளார் எனவும் இதனடிப்படையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 10 இலட்ச ரூபா வீதம் வழங்குவதற்கு அமைச்சரின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாணசபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைக்கு சென்றிருந்த உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்பைசர் முஸ்தபா ,கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் மாகாண செயலாளர்கள்,பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வாகனங்கள் மற்றும் உபகரணப் பற்றாக்குறை தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.