சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோருவதால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அத்துடன் அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது. தற்பொழுது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்குப் பொருந்தும் வகையில் எடுப்பட்ட முடிவு குறித்து பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரு அணிகளும் தங்களுக்கு தேவையான பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் விருப்பப்பட்டால், அதில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் மூலப் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள சுயேச்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான சின்னத்தைத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் மூன்று சின்னங்களின் விருப்பப்பட்டியலை அளிக்க வேண்டும் எனவும் அதில் ஒன்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது