சிரியாவில் ரஸ்ய படையினரின் உயிரிழப்பு எண்ணிக்கை விபரங்கள் குறைத்து வெளியிடப்படுவதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. சிரியாவில் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் ரஸ்ய படைவீரர்களின் இழப்புக்கள் பற்றிய தகவல்களை ரஸ்ய அரசாங்கம் மூடி மறைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனவரிமாதம் முதல் ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்களில் மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கை மட்டுமே பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 5 படையினரே கொல்லப்பட்டுள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ள போதிலும் சுமார் 18 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மயான பொறுப்பாளர்கள், உள்நாட்டு ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிடம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த உயிர்ச் சேத விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சேத விபரங்கள் மறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.