இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்கள் மெதுவாக முன்னெடுக்கப்படவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நேற்றைய தினம் இலங்கை சார்பில் அறிக்கையை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்தினால் உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக நல்லிணக்க மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளை வெற்றிகரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உண்டு என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்புடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைத்து செயற்படும் எனவும் உறுதியளித்துள்ளார். அத்துடன் கால அவகாசத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை முழுமையாக அமுலாக்க முடியும் எனவும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.