167
யாழ்.அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் சிறைக்கூடத்தில் இருந்து தொலை பேசி ஊடாக சாட்சியங்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவு இட்டுள்ளார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் அவ்வாறு உத்தரவு இட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நித்தியானந்தன் அருள்நாயகி , மனைவியின் தம்பியான நித்தியானந்தன் சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்த குற்ற சாட்டின் கீழும், மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயப்படுத்திய குற்ற சாட்டில் பென்னம்பலம் தனஞ்செயன் எனும் நபர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைச்சாலையில் இருந்து தனஞ்செயன் சாட்சியங்களை தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். அது தொடர்பில் சாட்சியங்களால் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் அச்சுவேலி காவல்துறையினரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையில் நீதிவான் உத்தரவு பிறப்பிக்கையில்,
சாட்சியங்களை அச்சுறுத்தியமை தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம் அச்சுவேலி காவல்துறையினர் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை எனவும் அது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் , சிறைச்சாலையில் எவ்வாறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பிலும் , சிறைசாலைக்குள் எவ்வாறு தொலைபேசி கொண்டு செல்லப்பட்டது. என்பது தொடர்பில் விசாரணைகளை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் , குறித்த தொலைபேசி எவ்வளவு காலம் சிறைச்சாலைக்குள் வைத்து பாவிக்கப்பட்டது என்பது தொடர்பிலும் , குறித்த தொலைபேசியில் இருந்து உட்சென்ற மற்றும் வெளி சென்ற அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவு இட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டார்.
அதேவேளை முக்கொலை வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love