திரிகாலஞானம் – கவிஞர், பாடலாசிரியர் தேன்மொழிதாஸ்
°°°°°°°°°°°°°°°°°°°°°
நிலவு கனிந்து உதிரும்
பிரபஞ்சத்தின் நெற்றியின் உள்ளே
நாம்
அமர்ந்திருப்பது எக்காலத்து ஒளியின் மேல்
விரல்கள் குறில் நெடிலுடன் எழும்புகின்றன
அடவி பனியில் குளித்து
வெளிச்சத்தை ஆபரணமாய் அணிவது
அடர்பொன் குலா
மீன்கள் நீந்தும் ரோஜாப்பூக்கள்
தேசம் பாழ்படும் வேளை
அடித்து ஒடுக்கப்படும் மக்கள் திரள்
திகைப்பூண்டைப் போல் இருத்தல் நலம்
திரிகாலஞானம் ஆள்பவனுக்கு அல்ல
சமான்யனுக்கே வேண்டும்
இரத்தாம்பரச் சிவப்பும்
உறைபனி உள்ளமும்
எதிரிகளுக்கு ஆகாது
கைக்கூலியின் உதடுகள்
பொய்யின் களிம்புகளாலும்
வழக்காடும் நிலமிழந்தவனின் நரம்புகள் சாணைபிடிக்கப்பட்ட ஆயுதமாகவும் நடுங்கும்
நடுக்கம் நல்லது
பரிகாதம் பூசப்பட்ட வார்த்தைகளை
நாம் பாதுகாத்து பகைவரிடத்தில் எய்வதற்கு
முன் ஆயத்தம் அதுவே
கொழுத்த செல்வந்தன் காட்டில்
வெள்ளரிபடர கம்புகளாகப்பட்ட தகப்பன்களின் கால்களை
எள்ளின் முடிவாக்கப்பட்ட
திருமனசு கொண்ட தாய்களை
கைகள் முன்னங்கால்களாக்கப்பட்ட
குழந்தைகளை
நாம் காப்பாற்ற வேண்டும்
மொழி தொழும் நாடு என்றும்
மதம் முதுகெலும்பாக்கப்படாத தேசம் என்றும் ஒன்று உண்டோ
உன்னத நகரி எங்கிருக்கிறாள்
மீன்கள் நீந்தும் ரோஜாப்பூக்கள் தான்
நாம் யார்
வாழ்வே கைவேல்
மரணம் பிரதாபமுத்தமாக வேண்டும்
– தேன்மொழி தாஸ்
24.3.2017
6.13 am