இலங்கையில் சவாலான சூழ்நிலைகளை கையாளும் வகையிலான கல்விதிட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சவாலான சூழ்நிலைகளை ஒற்றுமையுடன் சமாளிக்க வேண்டியுள்ளது எனவும் அதற்காக எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வித்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இதற்கான ஏற்பாடுகள், நல்லிணக்க செயலணி மற்றும் கல்வி அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் சகோதரத்துவ பாடசாலை அமைப்பு பணிகள், சமய ரீதியிலான நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள், உள்ளிட்டவை வழங்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளின் உள்ளேயும் இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.