சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம் ஆண்டில் வரும் முதலாவது டெங்குக் கட்டுப்பாட்டு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனவே தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுச் சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரலாற்றில் இல்லாத பாரிய டெங்குநோய்த் தாக்கத்திற்கு நாடு தற்போது முகம்கொடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக இலங்கையில் வாரத்திற்கு 300 தொடக்கம் 400 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டு வந்த அதேவேளை 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது சடுதியாக அதிகரித்து, வாரத்தில் 2000 டெங்கு நோயாளிகளாகக் காணப்படும் அளவுக்கு நிலைமை மாறியிருந்தது என தெரிவிக்கும் கிளிநொச்சி பொதுச் சுகாதார பிரிவினர்,
வழக்கத்திற்கு மாறாக, தென்மேற்பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையானது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதே நிலை தொடருமாயின் பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பித்ததும் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து நாடளாவிய ரீதியில் வாரத்திற்கு 4000 அல்லது 5000 பொதுமக்கள் டெங்குநோயால் பாதிப்படையலாம். அறிவித்திருக்கும் சுகாதார துறையினர்
அவ்வாறு நேரிட்டால், குறுகிய காலத்தினுள் வைத்திசாலைகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படும்போது அவர்களை விசேடமாகக் கண்காணிப்பதற்குரிய மருத்துவ ஆளணி மற்றும் இடவசதிப் பற்றாக்குறை ஏற்படும். இது இறுதில் தகுந்த கண்காணிப்பு இன்றி டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் உயிரிழக்கும் ஆபத்தினை விளைவிக்கும். எனவே அவற்றை தடுக்கும் வகையில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்கி நோய் வருமுன் தடுக்கும் சிறந்த வழியை பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள சுகாதார துறையினர்
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 2016ம் ஆண்டில் மொத்தமாக 86 டெங்கு நோயாளிகளே இனங்காணப்பட்டிருந்தனர். ஆனால், 2017ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் (24.03.2017) மொத்தம் 304 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இந்த நிலைமை மேலும் அதிகரிக்காமல் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. எனவே மிகக்குறைந்த ஆளணியுடன் அனைவரும் ஒரே அணியில் நின்று நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை கட்டுக்கடங்காது சடுதியாக அதிகரித்தால், கிளிநொச்சியில் ஒரு அவலம் நிலைமை ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகிவிடலாம். எனவே, நாம் ஒவ்வொருவரும் எமது வசிப்பிடங்கள், அயல்பகுதிகள், வேலைத்தளங்கள், கல்விக்கூடங்கள் என நாம் வாழும் மற்றும் நடமாடும் எந்த இடத்திலும் நுளம்புகள் வாழ்வதற்கு ஏற்;ற சூழலை அளிக்காமல் இருப்பதே உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழிஎன தெரிவித்துள்ளனர்
இம்மாதம் 29 இலிருந்து சித்திரை 4 வரை நடைக்குழுவினர் வீடுவீடாக நடந்து வந்து டெங்கு நோய்காவும் நுளம்புகள் உள்ளனவா, அந்த நுளம்புகள் வளரக்கூடிய வாழ்விடங்கள் உள்ளனவா எனப் பார்வையிட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்
அத்துடன் மாவட்டத்தில் பராமரிப்பற்ற நிலையில் கழிவுப்பொருட்களைக் கொட்டும் பகுதிகளாகப் பயன்படும் காணிகளை இனங்கண்டு அந்தந்தப் பகுதிகளுக்குரிய பிரதேசசபைகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன. எனவே காணி உரிமையாளர்களோ அல்லது உரிமையாளர்களுக்குப் பதிலாக அக்காணிகளைப் பராமரிப்பவர்களோ விரைந்து அவற்றைச் சுத்தப்படுத்துவதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என கிளிநொச்சி பொதுச் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.