அரச நிறுவனங்களிற் பணியாற்றுபவர்கள் (அதிகாரிகளில் இருந்து பணியாளர்கள் வரை ) விடும் தவறுகள், செய்யும் அதிகார துஸ்பிரயோகங்கள் போன்றவை மக்கள் மீது உண்டுபண்ணும் தாக்கம் அளப்பரியது. இவற்றைத்தட்டிக் கேட்டுத் திருத்தி சீரான, ஊழலற்ற அரச சேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டமைப்புகள் கூடப் பல வேளைகளில் மேற் கூறிய நிலைக்கு விதிவிலக்கற்றதாக ஆகிவிடுகின்றன. இந்நிலையிற் இத்தகைய விடையங்களப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை ஊடகங்களுக்கு வருகின்றது..
அதிகாரபலமும் சமூக பலமும் கொண்டவர்கள் செய்கிற ஊழல்களையும் குற்றங்களையும் ஊடகங்களாலும் கூட இலகுவாக வெளிப்படுத்திவிட முடிவதில்லை. குற்றங்களைச் செய்வோர் ஆதாரங்களை அழித்தல், ஒழித்துவைத்தல் சாட்சியங்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தம்மைப் பாதுகாக்க முயல்கிறார்கள். இவர்கள் ஊடகங்களைச் சமூகத்தில் முன்னிலையில் உள்ளவர்களினுடாக அணுகி தமது நலன்களைப் பேணுபவையாக அல்லது தமது தவறுகளை மறைப்பவையாக மாற்ற முயற்சியும் செய்கிறார்கள். ஆனாற் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் எளிமையான மக்கள். அவர்களுக்கோ மார்க்கங்கள் இருப்பதில்லை.
இலங்கையில் அதிகார துஸ்பிரயோகம், ஊழல், சுரண்டல், மென்வலுவுடன் கூடிய பாலியல்வன்முறை அல்லது துஸ்பிரயோகம் போன்றவை ஆழ வேரூன்றி அரச கட்டமைப்புகள் முழுமையும் தலைகாட்டி வருகின்றன.
மூன்று தசாப்த விடுதலைப்போராட்ட வரலாற்றைக் கொண்ட சமூகத்துள் மேற்கூறிய பிரச்சனைகள் இவ்வளவு வேகமாகத்தலை தூக்கும் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் இதுதான் நிதர்சனம்.
இந்நிதர்சனம் தருகிற வேதனை அளப்பரியது. விளைவாக ஏமாற்றமும், இயலாமையும், அதிருப்தியும் ஏற்படுகின்றன. இப்பின்னணியில் ஒரு நிலையில் இவற்றை ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி பிரச்சனைகளுக்கு நிவாரணம் தேட மக்கள் தலைப்படுகிறார்கள்.
ஊடகங்கள் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கிற அதே வேளை குற்றமிழைப்பவர்களைச் சமூகத்துக்கு இனம் காட்டுகிற ஒரு ஊடக அளிக்கை முறைமையைச் செய்ய முயல்கின்றன. இவ் அளிக்கை முறைமை விடுப்பும் விண்ணாணமும் பேசுகின்ற ஒன்றாக இருக்கவும் கூடாது என்பதையும் உணர்கிறோம். தனிமனிதர்களின் பரஸ்பர உடன்பாட்டுடன் கூடிய பாலியல் நடத்தைகளைப் பொது வெளியில் செய்தியாகக்குவது தவறானது அருவருக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. எமது சமூகத்தில் பெண்கள் ஆண்களினால் நேரிடையாகவும் மறை முகமாகவும் நெளிவு சுழிவான வகைகளிலும் அவர்களது இச்சைக்கு இணங்க வைக்கப்படுகின்றனர் என்பதையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும்.
பத்தியை எழுதுபவர் எவராக இருந்தாலும் அது எமது ஊடகத்தில் வெளி வரும் பொழுது அப்பத்தி ஏற்படுத்தும் தாக்கத்திற்கான பொறுப்பை அதன் ஆசிரியர்தான் ஏற்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஆதாரங்களை வெளிப்படுத்தி, ஒரு குற்ற அல்லது ஊழற்செயலைக் கண்டித்துப் பத்தியொன்றை எழுத விரும்புகிற பத்தியாளர் அதற்கான சூழல் இல்லாதபோது ஆதாரங்களைக் காட்டாது ஆனால் மிகவும் பொறுப்பான முறையில் அது குறித்துப் பத்தியொன்றை எழுத முடியும். மிகவும் ஆழமான மொழியாளுமை உருவாகும் போது இத்தகைய விடையங்களைக் கையாள்வது இலகுவாக இருக்கும். சமூக அக்கறையும் நேர்மையும் கொண்ட எங்கள் இளம் பத்தியாளர்கள் இந் நிலையையே நோக்கி நடக்கிறார்கள் என்று உங்களுக்கு நான் உறுதி தரவிரும்புகிறேன்.. எமது பத்தியாளர்கள் மக்களின் பக்கம் மட்டுமே நிற்பார்கள் என்றும் நான் உங்களுக்கு இக்கணம் நினைவுபடுத்த விரும்புகிறேன்..