இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால் இறுதியில் அது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே அமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் சாத்தியத்தன்மை குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தீர்வொன்று சாத்தியமாகும் காலகட்டத்தில் இந்த முரண்பாடுகள் காரணமாக முன்வைக்கப்பட்ட தீர்வுகள் காலந் தாழ்த்தப்படுவதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மைத்தரப்புக்கள் ஒரு மேசையில் அமர்ந்து தமது சமூகங்களுக்குரிய தீர்வுகளை அடையாளப்படுத்தி அதில் இருக்கும் சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.