யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சில மாணவர்களினால் பல்கலைக் கழக கட்டிடத்தின் கண்ணாடிகள் பல அடித்து நொருக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த போதும் தடையினை மீறி வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதனையடுத்து கலைப்பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு மாணவர் ஒன்றியம் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இவை தொடர்பில் ஆராய்ந்த பல்கலைக்கிழக நிர்வாகம் சம்பந்தப்பட்ட 13 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் கலைப்பீடத்தின் சகல வகுப்புக்களையும் உடனடியாக ஆரம்பிப்பதாகவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.