மொசூல் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றிய ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையின் உதவியுடன் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் சுமார் 6 லட்சம் மக்கள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு மொசூல் நகரை கைப்பற்றுவதற்காக ராணுவம் தாக்குதலை ஆரம்பித்த பெப்ரவரி 17ம் திகதியிலிருந்து மார்ச் 22ம் திகதி வரையில் 307 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் அதிகமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.