உண்மையைக் கண்டறியும் நிறுவனமொன்று நிறுவப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் நாட்களில் இந்த நிறுவனத்தை நிறுவுவது குறித்து அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை எவ்வாறு அமையும் என்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும், அது அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் யுத்தக் குற்றச் செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கிலுள்ள மிதவாதிகள் சர்வதேச விசாரணை தேவை என்று கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் நீதி விசாரணை பொறிமுறையில் வடக்கு மக்களை உள்வாங்கிக் கொள்ள முடியும் எனவும்,தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களானது போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை அது குறித்து விசாரிக்கும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.