கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம் வான்பாய்கின்ற போது சிறிய தாழ்பாலம் ஊடாக நீர் பாய முடியாமல் நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்றடி உயரத்திற்கு வீதியினை மூடி வெள்ளம் பாய்வதன் காரணமாக அக்கராயன் மத்திக்கும் கிழக்கிற்குமான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு அக்கராயன் பிரதேச மருத்துவமனையின் நோயாளர் காவு வண்டி கூட கிளிநொச்சி நகரத்திற்குச் செல்ல முடியாமல் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான்காயிரம் குடும்பங்கள் போக்குவரத்துகள் செய்ய முடியாமல் நெருக்கடியினை எதிர்கொள்கின்ற நிலையில் குறித்த பகுதியில் மேம்பாலம் அமைய வேண்டும் என்பது அக்கராயன் பிரதேச மக்களின் வேண்டுகையாக உள்ளது. அதிகாரிகளினாலும் அரசியல்வாதிகளினாலும் குறித்த பாலப்பகுதி பார்வையிடப்பட்டதே தவிர இதுவரை புனரமைப்பிற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றிலே இப்பாலத்தினை மேம்பாலமாக மாற்றுவதற்கு குறைந்தது ரூபா.எழுபது மில்லியன் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள இடர் மிகுந்த பகுதியாக அக்கராயன் தாழ்பாலப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.