முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு 3 மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் , 2 இலட்சம் அபராதமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.
குறித்த தீர்ப்பில் மேலும் நீதிபதி தெரிவிக்கையில் ,
குறித்த சம்பவம் ஆனது திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. மூண்டு கொலைகளும் திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. மற்றைய இருவரையும் கொலை செய்யும் நோக்குடனையே வெட்டி காயமேற்படுத்தப்பட்டு உள்ளது.
அதனால் எதிரியான பென்னம்பலம் தனஞ்செயனுக்கு, மூன்று கொலைகளை புரிந்த குற்றத்திற்காக மூன்று மரண தண்டனைகளும், இருவரை கொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயபப்டுத்தியமைக்கு தலா 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , தலா 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் அதனை கட்ட தவறின் 6 மாத கால கடூழிய சிறை தண்டனையும் , தலா ஒரு இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதனை வழங்க தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கிறேன். என தெரிவித்தார்.
மேல் நீதிமன்றில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படும் போது , மன்றில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறும் மின் விளக்குகளை அணைக்குமாறும் பணித்த நீதிபதி தீர்ப்பினை எழுதிய பின்னர் தீர்பெழுதிய பேனாவை முறித்தார்.
வழக்கின் பின்னணி.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்ப்பட்டது.