தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதன் காரணமாக காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என்றும், வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 19 நாட்களாக போராடி வருகின்றனர்.
சென்னையில் இன்று எழும்பூர் புகையிரத நிலையம் அருகில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் வலுப்பெறும் என மாணவர்கள் எச்சரித்தனர். பின்னர் காவல்துறையினருடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர்; போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பிலும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கடலூர் மாவட்டத்திலும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையிலும் போராட்டம் நடந்தது. கலிதீர்த்தான் குப்பம் பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். இந்தநிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்று விவசாயிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.