உச்சநீதிமன்றின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31ம் திகதிக்குள் மூடுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
மேலும் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
எனினும் இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யக்கோரி தமிழக அரசும், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில மாநில அரசுகளும் மற்றும் மதுக்கடை உரிமையாளர்களும் உச்சநீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
மனுக்களின் மீதான விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனே மூடுமாறு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது.
இதனைத் தொடர்ந்து 3,400 மதுபானக் கடைகளை உடனே மூடுமாறு நேற்றிரவு உத்தரவிட்டதனைத் தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது.