காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது.
காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.
விவசாயிகள் நடத்தும் இந்தத் தொடர் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இரவும் பகலும் போராட்டக் களத்திலேயே தங்கி இருக்கின்றனர் எனவும் விவசாயிகள் போராட்டத்தில் வெற்றி அடைய வேண்டும் என மாணவர்களும் இளைஞர்களும் பெரும் திரளாக பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.