214
இரட்டை கொலை குற்றவாளிகளை நாடு கடத்த ஏதுவாக அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நீதிமன்ற பதிவாளருக்கு பணித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் , 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
குறித்த சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்றால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்து யாழ்.மேல் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் அவர்களை இங்கிலாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும் என மேல் நீதிமன்றால் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி , நீதி அமைச்சு , அமைச்சின் செயலாளர் , வெளிவிவகார அமைச்சு , அமைச்சின் செயலளர் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் மன்றுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்நிலையில் குறித்த குற்றவாளிகளின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தால் அவர்கள் எந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பவை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்த முடியும் என குடிவரவு , குடியகழ்வு திணைக்களம் மன்றுக்கு தெரியப்படுத்தி இருந்தது.
அதனால் அது தொடர்பான விபரங்களை நீதிமன்ற பதிவாளர் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிபதி பணித்தார்.
அத்துடன் குறித்த இரு குற்றவாளிகளையும் நாடு கடத்துவது தொடர்பாக முன்னேடுக்கபப்டும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர் மற்றும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதுவர் ஆகியோருக்கும் இங்கிலாந்து உள்விவகார அமைசுக்கும் தெரியப்படுத்த தகவல்களை அனுப்பி வைக்குமாறும் நீதிபதி பணித்தார்.
இவற்றின் மூலம் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள இரு குற்றவாளிகளும் தம்மை நாடு கடத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளட்டும். எனவும் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் கண்ட மூன்று எதிரிகளுக்கும். இரட்டை கொலை குற்றத்திற்காக இரட்டை மரண தண்டனை வழங்கியும் , 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளக்கிய குற்ற சாட்டுக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் தண்ட பணமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளான நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா , ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் இருவரையும் நாடு கடத்தவே நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றது
Spread the love