Home இலங்கை உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலைய திறப்பு விழா – முதலமைச்சர் உரை

உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலைய திறப்பு விழா – முதலமைச்சர் உரை

by admin

வடமாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தினால் நிறுவப்பட்ட
உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலைய திறப்பு விழா
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதி, மண்கும்பான்
04.04.2017 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணியளவில்
பிரதம அதிதியுரை

குருர் ப்ரம்மா………….
தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, மற்றும் உயர் அதிகாரிகளே, அலுவலர்களே, சகோதர சகோதரிகளே!

தமது உழைப்பின் உற்பத்தியில் தம் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தும் எம் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான விற்பனை நிலையமொன்று இங்கு வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டு அதனை இன்று திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

வளர்ந்து வரும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை வழங்க முன்னுரிமை அடிப்படையில் பிரமாண அடிப்படையிலான நிதியின் கீழ் (CBG) பகுதி பகுதியாக ஒதுக்கப்பட்ட 45 மில்லியன் ரூபா செலவில் இந்நிலையம் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ் விற்பனை நிலையத்தைத் தீவகம் சார்ந்த ஏதாவதொரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று கருதப்பட்டது. முழுத் தீவகத்தின் உற்பத்திப் பொருட்களையும் அதாவது நெடுந்தீவிலிருந்து மண்டைதீவு வரையான அனைத்துத் தீவகப் பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வேலணைப் பகுதி மிகப் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிலையம் இங்கு கட்டப்பட்டுள்ளது. மண்கும்பான் வழியாகச் செல்லுகின்ற உள்ளூர் வெளியூர் உல்லாசப் பிரயாணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

காலத்தின் தேவை உணர்ந்து உள்ளூர் உற்பத்திகளை தரம் குன்றாததாகவும், நவீனத்துவமானதாகவும், கவர்ச்சி மிக்கதாகவும், உண்ணக்கூடிய உணவு வகைகளை  சுவையானதாகவும் சுகாதாரமானதாகவும் தயாரிப்பது அவசியம். பின்தங்கிய நிலையில் உள்ள இப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு இதுவே வழிசமைப்பதாக அமையும். உள்ளூர் உற்பத்திப் பொருட்கள், கைத்தறி மூலம் தயாரிக்கப்பட்ட துணிவகைகள், தொழிற்துறை உற்பத்திகள் மற்றும் கடலுணவு உற்பத்திகள் எனப் பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்கள் இந்நிலையத்தில் விற்பனை செய்யப்படவிருப்பதாக அறிந்தேன்.  உங்கள் தயாரிப்புக்கள் நவீனகரமானதாகவும் உல்லாசப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் அழகுற வடிவமைக்கப் பட்டதாகவும் இருப்பது விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மேலும் தற்காலத்தில் வெளியூர் உல்லாசப் பிரயாணிகள் பலர் உள்ளூர் நுகர்வோரைப் போன்று எளிமையான வாழ்க்கை முறைக்கு மாறியிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால அவதானிப்புக்களில் இருந்து அறியக்கிடக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து வரும் உல்லாசப் பயணிகள் முன்பெல்லாம் ஐந்து நட்சத்திர விடுதிகளையும் அதற்குச் சமமான தங்குமிடங்களையும் நாடிச் செல்வர். இப்போது அந்த நிலை மாறி மலிவானதும் எளிமையானதுமான இடங்களையே கூடுதலானவர்கள் நாடுகின்றார்கள்.  அத்துடன் அவர்களின் பிரயாணங்கள் கூட சைக்கிள் வண்டிகளிலும் முச்சக்கர வண்டிகளிலுமேயே நடைபெறுவதை நாம் கண்டிருக்கின்றோம். எனவே எமது தயாரிப்புக்கள் அழகானதாகவும் மலிவானதாகவும்; இருப்பது விரும்பத்தக்கது. உல்லாசப் பயணிகள் பலர் தற்போது எளிமையை மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது எமது கணிப்பு. அவர்களுக்கு ஏற்ற எமது உற்பத்திகளைத் தயார்ப்படுத்தி உரியவாறு பொதி செய்து விற்பனைக்கு விடுவது பொருத்தமான ஒரு பொறிமுறையென்றே நாங்கள் கருதுகின்றோம்.

தற்போது பாவனையிலுள்ள இலகுவில் உக்கிப் போகாத shopping bags பாவனை முற்றாக தடைசெய்யப்படுவதற்கான கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட இருக்கும் நிலையில் அவற்றிற்கு மாற்றீடாக பனங்குருத்து ஓலைகளில் தயாரிக்கப்படுகின்ற பைகளும் சீலைப்பைகளும் நல்ல வரவேற்பைப் பெறுவன. வாழையிலையில் தயாரிக்கப்படும் பல பொருட்கள் தற்போது சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அது போன்ற பொருட்களை அதிகளவில் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றமையால் அவ்வாறான உற்பத்திகள் சந்தை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இவை அனைத்திற்கும் மேலாக எந்தவொரு உற்பத்தி முயற்சியாக இருப்பினும் அதில் கூடிய ஆர்வமும் அதிக பங்களிப்பும் நவீனத்துவமும் கலக்கின்ற போதுதான் அவ்வுற்பத்திகள் சிறந்தவையாக அமைவன என்று கூறலாம். இவ்வாறான ஆர்வமும் விடாமுயற்சியும் எமது இளைஞர் யுவதிகள் மத்தியில் பரவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

சில காலத்திற்கு முன்னர் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. பனம் ஈர்க்கில் இருந்து தயாரிக்கின்ற சுளகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு இளைஞனை பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டு பத்திரிகையில் பிரசுரித்திருந்தார்கள். அவர் வயதில் குறைந்த இளைஞராக இருந்தார். எவ்வாறு இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தீர்கள் என வினவியதற்கு தாம் ஒரு பட்டதாரி எனவும் இரண்டு பட்டங்களை அவர் பெற்றுள்ள போதிலும் அரச திணைக்களங்களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ கடமை புரிய அவர் விரும்பவில்லை என்று கூறினார். ஆகவே இலாபகரமானதும் சந்தை வாய்ப்பு அதிகமானதுமான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க அவர் முனைந்ததாகவும் அப்போது சுளகு உற்பத்தி அவருக்குச் சிறப்பாக அமைந்த காரணத்தினால் அதனைத் தேர்ந்தெடுத்து உற்பத்திகளை ஆரம்பித்தது மட்டுமல்லாமல் பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுத்தார். அவரது மாதாந்த வருமானம் அப்போது பல இலட்சங்களாகக் காணப்பட்டதைப் பெருமையுடன் கூறியிருந்தார்.

எனவே எமது இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகந்தான் கதி என்று இல்லாமல் எமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைக் கொண்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதன்  மூலம் எதிர்காலத்தில் சிறந்த உற்பத்தியாளர்களாகவும் வருமானத்தை அதிகம் பெறுபவர்களாகவும் மாறலாம்.

அண்மையில் தொழிற்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம இங்கு வந்திருந்தார். இரண்டாயிரம் தொழில் முயற்சியாளர்களை நாடு பூராகவும் உருவாக்க வேண்டும் என்றும் அவர்களுள் இருநூறு பேரை வடமாகாணத்தில் உருவாக்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறினார். அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவி திருமதி.இந்திரா மல்வத்த ஏற்றுமதியாளர்களுக்குத் தம்மால் இயலுமான எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதிமொழி அளித்தார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மத்திய அரசாங்க அமைச்சர்களுடனும் அபிவிருத்தி சபைகளுடனும் கைகோர்த்து நன்மைகள் பெற்று எமது உற்பத்திகளைப் பெருக்கிக் கொள்வதும் ஏற்றுமதிகளை விருத்தியடைய உழைப்பதும் தவறல்ல என்று நான் கருதுகின்றேன்.

எம்முட் பலர் வெறுப்பின் அடிப்படையிலேயே அரசியலிலும் ஈடுபடுகின்றார்கள்; மற்றைய துறைகளிலும் செயற்படுகின்றார்கள். சதா குற்றம் கூறிக்கொண்டிருக்கவே விரும்புகின்றார்கள். எந்த முன்னேற்றத்திலும் ஈடுபடாமல் இருப்பதே தோதான அரசியல் என்று நினைக்கின்றார்கள். இது தவறு. எமக்கு அரசியல் ரீதியாகத் தவறு இழைக்கப்பட்டுள்ளது உண்மையே. ஆனால் அதற்காக நாம் எம் மனதில் வெறுப்பையும் துவேஷத்தையும் வளர விடுவது பிழையென்றே எனக்குப் படுகின்றது. அது வன்முறைக்கே வித்திடும். வன்முறையால் ஏற்பட்ட அவதிகளையும் அனர்த்தங்களையும் அல்லல்களையும் அனுபவித்தவர்கள் எம்மக்கள். மீண்டும் பொறாமை, துவேஷம், வெறுப்புணர்ச்சி போன்றவற்றின் பாதையில் பயணிப்பது எமக்கு அழிவையே ஏற்படுத்தும். எமது சிந்தனைகள் மாற வேண்டும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் என்றார் வள்ளுவர்.
நாம் எடுத்துக் கொண்ட செயலின் தன்மையையும், எங்கள் வலிமையையும், மாற்றான் வலிமையையும் எம் இருவருக்குந் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்ப்பட வேண்டும் என்றார் அவர். அண்மைய ஜெனிவா நாடகத்தில் எம் வலிமையும், மாற்றானின் வலிமையும் எமக்குத் துணையாக இருப்பவர்களின் வலிமையையுந் தெரிந்து கொண்டோம். காலத்திற்கு ஏற்றவாறு எமது சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். வெறும் ஆத்திரமும் ஆசூயையும் ஆண்மையென்று எம்முள் பலர் நினைக்கின்றார்கள். அது தவறு. எமது துணை வலிமையை மேம்படுத்த வேண்டும். அதனால்த்தான் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வோருடன் கூட்டுச் சேரவேண்டும் என்று நினைக்கின்றேன். அதன் ஊடாக எங்கள் பொருளாதார வலிமையையும் மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். இதைச் செய்வதாக இருந்தால் நாங்கள் தனிப்பட்ட விதத்தில் அரசாங்கத்திடம் இருந்து நன்மைகளை எமக்கென்று எதிர்பார்க்கக் கூடாது. அவ்வாறான பொறியில் நாங்கள் அகப்பட்டுக் கொண்டோமானால் எமது கோரிக்கைகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

வடபகுதியை சிறந்த உற்பத்திக்கான ஒரு மையமாக மாற்றுவோம் என்று நாங்கள் யாவரும் உறுதி பூணுவோம். அதற்கான உதவி நல்குவோருடன் கூட்டுச் சேர முன்வருவோம். எமது பொருளாதார விருத்தி எமது வலிமையை வலுவாக்கும் என்பதை மறவாது இருப்போம். எமது பொருளாதார விருத்திக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம். வடமாகாணத்தின் தொழிற்துறைத் திணைக்களம் எமதுபுதிய உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் தொழில் நுட்பங்களையும் வழங்குவதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும் என்று அறிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More