146
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளது. இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றில் மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்ட்டு உள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரிய வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிபதி மா .இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த நபர் மனநிலை குன்றியவர் , அவர் சாட்சியங்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட கூடியளவில் உடல் வலிமை உடையவரும் இல்லை. கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரை தகுந்த பிணை நிபந்தனையில் விடுவிக்குமாறு பிணை விண்ணப்பம் செய்தார்.
அதனையடுத்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறித்த நபரை பிணையில் செல்ல ஆட்சேபனை தெரிவித்தார். மாணவி கொலை வழக்கில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் தற்சமயம் அரச சாட்சியமாக மாறுவதற்கு சம்மதித்து உள்ளார். அதவேளை குறித்த வழக்கு ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைகளத்திற்கு பாரப்படுத்தபப்ட்டு உள்ளது. தற்போது ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளன. இந் நிலையில் இந்த சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
Spread the love