ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவை விடுதலை செய்யும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் துரித கதியில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பிரதமர், அரசாங்க சட்டத்துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்குமாறு பல தடவைகள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தம்மிடம் கோரியதாகவும், அவரை சிறையில் அடைத்து வைக்க அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது என தாம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சிங்கள புது வருடத்திற்கு முன்னதாக விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கக்கூடிய பின்னணியை உருவாக்குமாறு பிதமர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடவுச்சீட்டு பிரச்சினை ஒன்றின் போதும் பிரதமர் தலையீடு செய்து விமல் வீரவன்சவை காப்பற்றியதாக முன்னதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.