167
இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி 2017 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட காலம் என்பது, அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் என்று குறிப்பிடுவது சரியான சொற்பிரயோகமல்ல என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாதமாகும்.
இலங்கைக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனித உரிமைப் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தை அரசு நிறைவேற்றுவதை ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்பார்வை செய்வது அல்லது கண்காணிப்பதற்கான சந்தர்ப்பம் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்று அவர் வியாக்கியானம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் இடம்பெற்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்திற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கி அதனை முழுமையாக நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது. அவ்வாறு நிறைவேற்றுவதற்கான ஒரு கால அவகாசமும் ஐநா மனித உரிமைப் பேரவையினால் வழங்கப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் ஏற்படுகின்ற முன்னேற்றத்தைக் கண்காணிக்கின்ற பொறுப்பு ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்டு கூறுத்தக்க வகையில், ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றங்கள் காணப்படவில்லை. இந்த நிலையிலேயே நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக, மீண்டும் அதன் இணை அனுசரணையுடன் இரண்டாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
முதலாவது பிரேரணையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தப் பிரேரணையின் வலியுறுத்தலாகும். இரண்டாம் முறையாக அரசுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும், பிரேரணையை நிறைவேற்றாமல், கடந்த முறையைப் போல காலத்தை இழுத்தடித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து எந்தவிதமான நிபந்தனையும் இதில் விதிக்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்தைச் செயற்படுவத்துவதற்குத் தூண்டும் வகையில் நிபந்தனையைப் போன்று எந்தவிதமான வலியுறுத்தலுமின்றி இரண்டாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பது முதலாவது விடயம்.
இரண்டாவது விடயம் முதல் பிரேரணையில் கூறப்பட்டுள்ளவாறு கலப்பு நீதிவிசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த மாட்டோம் என்று அரசாங்கம்; தெளிவான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, அத்தகைய பொறிமுறையொன்றை உருவாக்கி உண்மையைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், ஏற்கனவே நிகழ்ந்ததைப் போன்ற மனித உரிமை மீறல்களோ அல்லது, சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் சம்பவங்களோ இடம்பெற மாட்டாது என்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இது மிகவும் வேடிக்கையானது. பாதிக்கப்பட்டு நீதிக்காக ஏங்குகின்ற மக்களைப் பொருத்தமட்டில், இது விபரீதமானதும்கூட.
பிரேரணை நிறைவேற்றப்பட்ட சூட்டோடு சூடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கே பலாலியிலும், தெற்கே குருணாகலையிலும் இரண்டு வேறு வேறு நிகழ்வுகளில் கலந்து nhகண்டு உரையாற்றுகையில் யுத்தத்தை வெற்றி கொண்ட படையினருக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் சுமத்தப்படமாட்டாது. அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படமாட்டாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
அரச படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பது முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதே நிலைப்பாட்டையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கமும் கொண்டிருக்கின்றது. போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடாத படையினர் மீது ஏன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கேள்வியாகும். குற்றச் செயல்களில் ஈடுபடாத படையினருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படமாட்டாது. அது அவசியமில்லை என்பது அவருடைய கூற்று.
குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்றால் யுத்த மோதல்களின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கி;ன்றார்கள். பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே, அங்கு என்ன நடந்தது, உண்மையான நிலைமைகள் என்ன என்பதைக் கண்டறிவதற்காக விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது. உண்மையைக் கண்டறிந்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும் என்பது ஐநாவினதும் சர்வதேசத்தினதும் நிலைப்பாடாகும். எனவே அதற்காகத்தான் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் ஒரு விசாரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் அஞ்ச வேண்டியதில்லை. அத்தகைய விசாரணையை எதி;ர்கொள்வதற்கு முதுகெலும்பு இல்லையா என சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த முதுகெலும்பு விவகாரம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்ததை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்தின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றோர் சர்வதேச நீதிபதிகளுக்கோ அல்லது விசாரணையாளர்களுக்கோ அவசியமில்லை. உள்ளக விசாரணைகளே நடத்தப்படும். விசேடமாக அரச படையினர் எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்று அறுத்து உறுத்து தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள். சர்வதேச விசாரணையை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பு இருக்கின்றதா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அவர்களுடைய இந்த கூற்றுக்கள் அமைந்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டிருந்த (ஓரிரு) கூட்டத்திலேயே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறி;ப்பிடத்தக்கது.
கலப்பு நீதி விசாணைப் பொறிமுறையின் ஊடாகவே பொறுபு;பு கூறுதலுக்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் விலகவில்லை. அவர் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றார். ஆனால் அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டையே அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இருந்தும் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் அரசு தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உரிய முறையில் நிறைவேற்றுமா என்பது பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிலும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கின்றது.
உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஏற்கனவே ஒன்றரை வருட காலப்பகுதியை அரசு இழுத்தடிப்பு செய்திருப்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்கள். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன், இது, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான அவகாசமாகக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
அவ்வாறு மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கண்காணிப்புக்கான சந்தர்ப்பம் என்றால், அரசாங்கம் முறையாகச் செயற்படுமாறு சரியாகக் கண்காணிப்பதற்கு ஐநா தவறிவிட்டது என்பதுதானே பொருள்? இனி வரும் இரண்டு ஆண்டு காலப்பகுதியில் அது சரியாகச் செயற்பட வேண்டும் – சரியான முறையில் அரசாங்கத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்றுதானே கொள்ள வேண்டும்?
ஐநா மனித உரிமைகள் பேரவை என்பது உலக நாடுகள் பலவற்றை உறுப்பினர்களாகக் கொண்டதோர் உயரிய சபையாகும். ஆனாலும், அங்கு கொண்டு வரப்படுகின்ற தீர்மானங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் முறையாகக் கடைப்பிடித்து நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுப்பதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகார வலுவை அது கொண்டிருக்கவில்லை.
ஓர் தீர்மானங்களின் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கலாமே தவிர அவற்றை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, அவற்றைச் செயற்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளின் மூலம் நிர்ப்பந்திப்பதற்கான செயலுரிமை அதனிடம் இல்லை. இந்த நிலையில் அடுத்து வருகின்ற இரண்டு வருடங்களில் அரசாங்கத்தை ஐநா எவ்வாறு செயற்படச் செய்யப் போகின்றது என்பது தெரியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை முன்வைத்துள்ள கோரிக்கையின்படி, இலங்கையில் ஐநா மனித உரிமை ஆணையாளருடைய அலுவலகம் ஒன்றை நிறுவி, அதன் ஊடாக ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. அத்துடன் அத்தகைய அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவிச் செயற்படுவதற்கு அரசு உடன்படும் என்று கூறுவதற்கில்லை.
எனவே, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு அழுதத்தைதக் கொடுக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் நகர்வு வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகவே தோன்றுகின்றது.
யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள்; தமிழ் மக்கள். அந்த மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே திகழ்கின்றது. எனவே, அந்த மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றுக்குரிய செயற்பாடுகளையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டியது கூட்டமைப்பின் தலையாய கடமையாகும். அந்தக் கடமையை, கடந்த எட்டு வருடங்களில் அது எந்த அளவுக்கு முன்னேற்றகரமான முறையில் முன்னெடுத்திருக்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
அரசாங்கத்துடன் நேரடியான செயற்பாடுகளின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது சாத்தியமற்றது என்ற காரணத்திற்காக சர்வதேசத்தின் துணையுடன் – சர்வதேசத்துடன் இணைந்து காய் நகர்த்தல்களை மேற்கொண்டு அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திரச் செயற்பாடுகளை கூட்டமைப்பின் தலைமை முன்னெடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ஓர் அரசியல் பிரசாரமாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்றுகூட குறிப்பிடலாம்.
முன்னைய அரசாங்கத்தைப் பொருத்தமட்டில் இத்தகையதொரு நடவடிக்கை சரியானதாகத் தோற்றலாம். ஆனால், புதிய அரசாங்கத்தை – நல்லாட்சிக்கான அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையே ஆற்றியிருந்தது என்றும் பெருமையாகப் பேசப்படுகின்றது. இதற்காக அந்தத் தலைமை உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்டதாகக் கூட மின்னஞ்சல் வழியான பிரசாரத் தகவல்களில் குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய செயற்பாட்டின் ஊடாகவே தமிழ் மக்களை ஓரணியில் திரட்டி, முன்னைய ஜனாதிபதியையும் ஆட்சியையும் தேர்தல்களில் தோல்வியுறச் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான மேலி; மட்ட வேலைகளில் கூட்டமைப்பின் தலைமை முன்னெடுத்திருக்கலாம். அதில் சந்தேகப்படுவதற்கு எதுவுமில்லை. அன்றைய சூழலில் அது உயிரைப் பணயம் வைக்கின்ற ஒரு கைங்கரியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், தலைவர்கள் முடிவு செய்வதற்கு முன்பே, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முன்னைய அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்கப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள் என்பது உலகறிந்த இரகசியமாகும்.
ஏனெனில் கூட்டமைப்பின் தலைவர்களைவிட, அதிக அளவில் உயிரச்சுறுத்தல்களையும், பல்வேறு வழிகளிலான ஆபத்துக்களையும் கிராமங்களில் அடிமட்டத்தில் வாழ்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடன் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரின் ஊடாக எதிர்கொண்டிருந்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக இராணுவத்தினர் தேர்தல் பிரசார வேலைகளில் அப்போது ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அவருக்கு எதிராக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் எந்தவொரு தனி மனிதனும் மனதளவில்கூட தீர்மானம் மேற்கொண்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ரு இராணுவ புலனாய்வாளர்கள் இரவும் பகலும் ஒய்வின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், இராணுவம் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்தன.
அத்தகைய ஒரு சூழலில்தான் தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல், அடுத்து நடத்தப்பட்ட பொதுத் தேர்தலிலும், நல்லாட்சி அரசாங்கம் உருவாகத் தக்க வகையில் அவர்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, அமைதியானதொரு புதிய வாழ்க்கைக்கான அவர்களுடைய அரசியல் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தக்க வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்சரி, அவருக்கு அடுத்த நிலையில் பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும்சரி, செயற்படவில்லை. செயற்படத் தவறியிருக்கின்றனர்.
அதேநேரம், புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், அந்த ஆதரவின் ஊடான அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் உரிய பலன் தரத்தக்க வகையிலான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவில்லை. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும் என்ற கரிசனை மேலோங்கியிருக்கின்றதே தவிர, பாதிக்கப்பட்ட தமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு, படிப்படியாகவாவது தீர்வு காண வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை கொடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்தை நிர்ப்பந்தித்துச் செயற்படச் செய்தால், அது எதிரணியினராகிய மகிந்த குழுவினர் மீண்டும் அரசியலில் செல்வாக்கு பெறுவதற்கு வழிசமைத்துவிடும் என்ற கரிசனையிலேயே கூட்டமைப்புத் தலைமையின் கவனம் செறிந்து குவிந்திருக்கின்றது. அரசாங்கத்தின் மீது எந்த வகையிலாவது செல்வாக்கைச் செலுத்தி, மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் நடைமுறை ரீதியிலான செயற்பாடுகளை அதனிடம் காண முடியவில்லை. அரசாங்கத்திற்கு வலிக்காலமல் அழுத்தம் கொடுக்கின்ற ஒரு போக்கையே அது கடைப்பிடித்து வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கைக்கு அடித்தளமாகிய காணி உரிமைக்காக, இராணுவ முகாம்களின் எதிரில் – துவக்கு முனைகளில் வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்தி சிறுகச் சிறுக தமது காணிகளை மீட்டு வருகின்றார்கள். அதேநேரம், வீதியோரங்களில் வெய்யிலில் காய்ந்தும், பனியில் நனைந்தும், கொட்டும் மழையில் தோய்ந்து நுளம்பு கடிக்கு மத்தியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட மற்றுமொரு தரப்பு மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களுக்கு ஆதரவளித்து, வழிநடத்துவதிலும் கூட்டமைப்பின் தலைமை தவறியிருப்பதையே காண முடிகின்றது. இதனால் கூட்டமைப்பின் தலைமைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்ற தன்மையும் காணப்படுகின்றது. தாங்கள் நம்பி வாக்களித்த ஜனாதிபதி மீதும், புதிய அரசாங்கத்தின் மீதும் அந்த மக்கள் எவ்வாறு நம்பிக்கை இழந்து வருகின்றார்களோ அதேபோன்று கூட்டமைப்பின் தலைமை மீதானதொரு நிலைமையை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் நழுவிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
ஐநா மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதாகப் பெருமையாகச் சொல்லப்படுகின்றது. அத்தகைய செல்வாக்கு மிக்க நிலையில், தமிழ் மக்களுடைய காணி விவகாரத்திற்கும், அது போன்ற ஏனைய பிரச்சினைகளுக்கும், தீர்வு காணலாம்தானே என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதிருக்கின்றது. அசாங்கத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தியோ அல்லது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்புகளையோ பயன்படுத்தி, இராஜதந்திர நகர்வொன்றை மேற்கொள்ளலாம்தானே? அதன் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் அல்லவா?
இத்தகைய அழுத்தமானது, இலங்கை அரசாங்கம் ஐநா பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சர்வதேச மட்டத்தில் வழங்கப்பட வேண்டிய அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ ரீதியிலான அழுத்தங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கூட அமையலாம். அதன் ஊடாக அடுத்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் ஐநா பிரேரணை நிறைவேற்றத்திற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கச் செய்யவும் வழியேற்படலாம்.
Spread the love