காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 14ம் திகதியிலிருந்து டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்ற தமிழக விவசாயிகள் 23 பேர் தமது போராட்டத்தை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டமாக விஸ்தரித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து வரும் விவசாயிகள் நேற்று முதல் தமது போராட்டத்தை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் பிரதமரை சந்திப்பதற்கு விவசாயிகள் காத்திருந்தபோதிலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினாலேயே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் நாளைய தினம் பிரதமரை சந்திப்பதற்கு தாமாகவே செல்லவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.