எகிப்தில் அமைந்துள்ள இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 44க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு மூன்று மாதங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல்களின் போது 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவர்களின் புனித வாரமானது குருத்தோலை ஞாயிறு நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதல்களை தொடர்ந்து, எகிப்தின் தேசிய பாதுகாப்பு சபையுடன் அந்நாட்டு ஜனாதிபதி அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிப் பகுதியில் பாப்பரசர் பிரான்ஸிஸ் எகிப்திற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில்; இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.