உள்நாட்டு போரில் இறந்தவர்கள் குறித்து இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் அடிப்படையில் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்களுடைய முதலமைச்சருடன் பேசியிருந்தார். இங்குள்ள அவலங்கள் குறித்து அறிந்து கொண்டார். இது தொடர்பில் அவர் கவனம் செலுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தார்.
இங்கு நடந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் அவர் வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு ஜெனீவா கூட்டத்தொடரிலும், ஏன் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் உங்கள் தொடர்பில் நானும் குரல் கொடுத்தேன். சில விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அவரும் நாங்களும் சேர்ந்து உங்கள் பிரச்சனைகள் தொடர்பில் தொடர்ந்தும் கரிசனை செலுத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
ஜெனீவா கூட்டத் தொடரில் உங்கள் பிரச்சனை தொடர்பில் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். கௌரவ எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போல தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தை விட மாறுபட்ட அரசாங்கமாக இருக்கிறது. தமிழ் மக்களுடைய பிரசிசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் அறிகின்றோம். நாம் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரளவு நடவடிக்கைகளை அல்ல. மேலும் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உங்களுடைய சாதாரண வாழ்க்கை வழமைக்கு திரும்பவும் இந்த அரசாங்கம் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும். இங்குள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும். அங்கிருக்கின்ற முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் கூடிய கவனம் செலுத்துகின்றோம்.
உங்களுடைய இடங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இந்த இடத்தில் கேட்டுக் கொள்கின்றோம். அதனை முறையாக செயற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். உங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில் உங்கள் சொந்தக் காணியில் நீங்கள் குடியேற அனுமதி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அனைத்து மக்களும் உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும். இது தான் கடைசி மீள்குடியேற்றம் எனக் கூறும் அளவுக்கு நிலமை மாற வேண்டும். உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் என்ற அடிப்படையில் ஒரு நீதியான விசாரணை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் மனிதவுரிமை பேரவையில் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இவை எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
இங்கு இருக்கின்ற உங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று நாங்கள் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திலும் ஜெனீவாவிலும் உங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். இப்படி இப்படி செய்யுங்கள் என நாங்கள் இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். தனிநபர்களாக இவ்வாறான பெரிய பணிகளைச் செய்வது கடினமானதாக இருக்கலாம். ஆனால் லைக்கா சுபாஸ்கரன் அவர்கள் ஒரு தனிநபராக இருந்து இவ்வாறு ஒரு வேலையை செய்திருப்பது இங்கு சிறப்புக்குரியது. நீண்டகாலமாக இடம்பெயர்ந்து இருந்த மக்களுக்கு இவ்வாறான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதையடுத்து நான் மகிழ்வடைகின்றோம்.
இனி நீங்கள் யுத்த சூழலில் வளரப்போவதில்லை. இங்கு சிறுவர் பூங்கா இருக்கிறது. அமைதியான சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தான் உங்களுடைய பிள்ளைகள் வளரப் போகிறார்கள். அதேபோன்று இந்த நாடு வெறுமனே அமைதியாய் மட்டும் தோன்றாமல் மத நல்லிணக்கம் மற்றும் ஏனைய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் டயஸ்போராக்களுக்கும் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு எடுத்துக் கட்டாக இருக்கிறார். இங்குள்ள பொதுப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவர்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.