182
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மிக மோசமான அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை குடாரப்பு முதல் சுண்டிக்குளம் வரை பதினொரு கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய வைத்தியசாலையாக காணப்படுகிறது. ஆனால் அதற்குரிய போதுமான அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுப்படவில்லை, பிராந்திய சுகாதார திணைக்களம், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நான்கு தாதியர்கள் கடமையாற்ற வேண்டிய வைத்தியசாலையில் ஒரு தாதியர் கூட இல்லை எனவும் ஓய்வுப்பெற்ற ஒருவர் மீண்டும் பணிக்கமர்த்தப்பட்டு கடமையாற்றி வந்த நிலையில் அவரும் தற்போது மீண்டும் ஒய்வுப்பெற்றுச் சென்றுள்ளமையினால் சிகிசை பெற வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றுகின்ற மருத்துவர் ஒருவரே தாதியரின் கடமைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், நான்கு மருத்துவர்கள் இருக்க வேண்டிய வைத்தியசாலையில் ஒரு பொறுப்பு மருத்துவ அதிகாரியும், ஒரு பதிவு செய்யப்பட்ட வைத்தியரும் கடமையாற்றுகின்றனர். இந்த நிலைமையால் போக்குவரத்து நெருக்கடிமிக்க இந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் சிகிசைகளை பெறுவதில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் பணியாற்றி வருகின்ற வைத்தியர் தாதியரின் பணிகளையும் செய்வதனால் அவர் பணிச்சுமைக்கு ஆளாகி சில வேளை இடமாற்றம்பெற்றுச் சென்றுவிட்டால் எமது வைத்தியசாலையின் நிலைமை மிக மோசமாகிவிடும் எனவும் எனவும் எனவே முதலில் ஒரு நிரந்தர தாதியையாவது நியமனம் செய்யுமாறு கோரிக்கை விடுவதாகவும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love