ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் நிலம் என்ற தமிழ் இதழின் ஆசிரியருமான எஸ்.போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகரன் கொல்லப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் ஊடகங்களில் எழுதி வந்த சுதாகரன் வீரகேசரி பத்திரிகையிலும் பணியாற்றியவர்.
இவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதம் தாங்கிய ஆறு பேர் சுதாகரனை அவரது எட்டு வயதான மகனின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகள் தமிழிலும் சிங்களத்திலும் கதைத்ததாக அவரது மகன் பின்னர் தெரிவித்தார். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில், பல்வேறு கொலைகள் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இவரது கொலையும் இடம்பெற்றது.
இவரது கொலை தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பன்னாட்டு செய்தியாளர்கள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்களை படுகொலை செய்வது பத்திரிகை தர்மத்தின் படுகொலைக்கு ஒப்பானது என வவுனியா மாவட்ட நீதிபதி ஆ.இளஞ்செழியன் சுதாகரனின் மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அமைதியை விரும்புபவை இவரது கவிதைகள் . அதிகாரத்தை எதிர்த்து அழிப்பை எதிர்த்து, குருதியை எதிர்த்து, வாதைகளை எதிர்த்து ஒரு குழந்தையைப் போல அணுகுபவை இவரது கவிதைகள். ஈழத்து கவிதை உலகில் தனித்துவமான கவிஞராக மளிர்பவர். ஈழத்தில் நடந்த இன வதைகளை ஆழமான படிமங்களின் மூலம் சித்திரித்தவர்.
எஸ்.போஸின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இம் மண்ணின் உன்னதமான ஒரு கவிஞனை அழித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கொலையாளி எஸ்.போஸை கொன்றிருக்கலாம். ஆனால் அதிகாரத்தை நோக்கி கூர்மையாக தாக்கும் அவரது கவிதைகளை கொல்லுதல் இயலாத காரியம்.
மரணத்தோடு விளையாடிய குழந்தை – தீபச்செல்வன்
உனது ஒளி மிகுந்த கவிதைகளிடம்
அவர்கள் முழுமையாக
தோற்றுப்போனார்கள்
இருளை கொடடூர முகத்தில்
அப்பிக்கொண்ட அவர்கள்
வலிமை மிகுந்த
உனது குரலிடம்
சரணடைந்து போனார்கள்.
விழித்துக்கிடந்த
உனது சுதந்திரத்தின்
குழந்தைமீது
கூரிய கத்தியை வைத்து
குரலை நசித்துவிட்டு
சிரித்தபடி போகிறார்கள்.
நீ சுமந்துவந்த
தேன் நிரம்பிய மண்பாணை
உடைந்து போனதாய்
அவர்களுக்குள்
திருப்தி தலை தூக்க
வீதியை இருட்டாக்ககி
ஓடிக்காண்டிருக்கிறார்கள்.
இருப்பினும் உனது
எல்லா கவிதைகளும்
விழிகளில்
சூரியனை கொண்டு
பிரகாசிக்கின்றன
உனது எண்ணங்கள்
கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.
நீ வாழ்ந்து வந்த
சோலைகளின் மீதும்
அவர்களின் கத்திகள் பதிந்தன
நீ வளர்த்த மரங்களின்மீதும்
அவர்களின் துப்பாக்கிகள்
பதிந்தன
உன்ன தூக்கிக்கொண்டு
கருகிய வனம் ஒன்றிறிகுள்
போகச்சொன்னார்கள்.
நீ கொண்டாடிய சிரிப்ப பலியெடுக்க
பின் தொடர்ந்து வந்தார்கள்
நீ எதிர்த்த பயங்கரத்த
உன் மீதே
பிரயோகிக்க திரிந்தார்கள்.
எப்போழுதும் போலவே
உனது வானம்
உனது நிறத்த அணிந்திருக்கிறது
எப்போழுதும் போலவே
உனது வழி உனது வெளிச்சத்தில்
மிகுந்திருக்கிறது
இன்னும்
உனது வார்த்தைகள்
உனது இசையால் நிறைந்நிருக்கின்றன
உனது கேள்வியும் போராட்டமும்
அதிகாரங்களுக்கு முன்னால்
முண்டியடிக்கிறது.
ஒரு குழந்தையை
படுக்கையின் மீது
படுகொலை செய்து விட்டு
எப்பொழுதும் விடுதலைக்காய்
அதிகாரத்தை எதிர்த்து
குரலிடும்
அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை
எடுத்துப்போகிறார்கள்.