213
கிராமிய வளர்ச்சியை மேம்படுத்தி, கிராமங்களை விட்டு மக்கள் ஏகா வண்ணம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அபிவிருத்தியை உண்டு பண்ணுவது எமக்கு மிக அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் “கிராமிய வளர்ச்சியே உயர்ச்சி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்றினை யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியில் செவ்வாய்கிழமை நடாத்தி இருந்தது. அக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
கிராம அபிவிருத்தி என்பது பாரம்பரியமாக இயற்கையால் வழங்கப்பட்டுள்ள காணிகளை விவசாயத்திற்கும் கால்நடை அபிவிருத்திக்கும் பாவிப்பதற்கு ஊக்கம் அளிப்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அண்மைக் காலங்களில் நகர்ப்புற ஆதிக்கம் மேம்பட்டுள்ளதால் கிராமப் புறங்களும் மாற்றம் அடைந்து வருகின்றன.
பல விடயங்கள் கிராம அபிவிருத்தியுடன் தற்போது தொடர்புபடுத்தப் படுகின்றன. உதாரணமாக சுற்றுலாத்துறை, கைத்தொழில் அபிவிருத்தி, இளைப்பாறலுடன் சம்பந்தப்பட்ட தொழில்கள் எனப் பல துறைகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, தொழில் முயற்சித்துறை போன்ற பலவற்றிலும் இப்பொழுது கிராம அபிவிருத்தித்துறை ஈடுபாடு காட்டி வருகின்றது. உள்ளூர் விளைபொருட்கள் ஒருபுறம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகையில் செய்பொருட்களை மேம்படுத்தலும் முன்னிலை பெற்று வருகின்றது.
அகன்ற மாகாண, நாடளாவிய ரீதியில் எவற்றைச் செய்து மாகாண, நாடளாவிய அபிவிருத்திக்கு கிராமங்களால் உதவி புரியலாம் என்பதும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.உலகை மாற்றியமைப்பதற்காக ஐக்கிய நாடுகளால் தயாரிக்கப்பட்ட அண்மைய நிலைபெறு அபிவிருத்தி 2030ம் ஆண்டுக்கான இலக்குகளிலுங் கூட நிலைபெறு கிராம முன்னேற்றமானது குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் பொருட்டே எமது கிராம அபிவிருத்தித் திணைக்களம் கிராமிய வளர்ச்சியை உயர்ச்சி பெற வைக்கும் எண்ணத்துடன் இந்தக் கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக முன்னேடுக்கப்படுகின்ற ஒவ்வொரு வேலைத்திட்டத்தினையும் பயிலுனர்களுடாக வெளிப்படுத்தலே இக்கண்காட்சியின் நோக்கமாகும். உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினையும் வெளி உற்பத்தியாளருடனான தொடர்பினையும் ஏற்படுத்துவதன் மூலம் உள்ளுர் உற்பத்தியின் சந்தை வாய்ப்பு தளத்தினை ஏற்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.
தனிநபர்களின் சுயதொழில் முயற்சியினையும் வருமானத்தினையும் மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி நெறிகள் அமைந்துள்ளன. தனியார் துறையினையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் எமக்குண்டு. இன்று அரச துறை, தனியார் துறை, அரசசார்பற்ற நிறுவனங்களின் துறை என்று மூன்று துறைகளும் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகின்றன.
மூன்றாம் நிலை தொலைக்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அமைவாக ஒருவருட மனைப் பொருளியல் டிப்ளோ மா பயிற்சி நெறி, ஆடைவடிவமைத்தல் பயிற்சி நெறி நடாத்தப் பட்டு அதன் முடிவுப் பொருட்கள் இன்று இங்கு காட்சிப் படுத்தப்படுகின்றன.
மொத்தமாக எமது கொள்கையே கிராமிய வளர்ச்சியை மேம்படுத்துவதே. கிராமங்களை விட்டு மக்கள் ஏகா வண்ணம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அபிவிருத்தியை உண்டுபண்ணுவது எமக்கு மிக அவசியம். ஏற்கனவே நாம் இடம் விட்டு இடம் மாறி புலம் பெயர்ந்து வந்துள்ளோம். குடி இருக்கும் எம் சொந்த மண்ணில் அபிவிருத்தியை நாம் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
பாரிய செயற்றிட்டங்கள் எதுவும் உங்களால் நடைமுறைப்படுத்தப்படவில்லையே என்று சிலர் எம்மிடம் கூறியதுண்டு. அவ்வாறான செயற்றிட்டங்கள் மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றிற்கு கூடுமானவரை நாம் ஒத்துழைப்பு நல்கி வருகின்றோம். ஆனால் அடிப்படையில் கிராமிய எழுச்சியையும் அபிவிருத்தியையும் உருவாக்குவதே எமது குறிக்கோள் என மேலும் தெரிவித்தார்.
Spread the love