மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் மக்களிடம் வரியை அறவிடுவதோடு நிற்பதில்லை. அந்த வரியின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய வகையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வரியைப் பயன்படுத்துகிறது. அதனால் தான் அபிவிருத்தி அடைந்த நாடுகளை இன்றும் சிறந்த நாடுகள் என்று போற்றுகிறோம். இலங்கையைப் பொறுத்தமட்டில் மக்களிடம் இருந்து வரியை அறவிடுவதுடன் அவர்களின் வேலை முடிந்து விடுகிறது. அந்த வரி மூலம் பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்ள எவரும் முயல்வதில்லை இதனால் தான் இன்று இலங்கையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதுவும் வடக்கில் ஊழல் மோசடி அதிகளவில் இடம்பெறுகிறது.
யாழில் சில வியாபார நிலையங்களில் இருந்து அண்மையில் மேலதிகமான வரியை சம்பந்தப்பட்ட திணைக்களம் அறவிட்டுள்ளதாக வியாபார நிலைய முதலாளிகளிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வியாபார நிலையங்களின் வருவாயை விட மேலதிகமாக வரியை அறவிட்டுச் செல்கின்ற நிலை தொடருமாக இருந்தால் சில வியாபார நிலையங்கள் மூடும் அளவுக்கு வந்துவிடும் என்று வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர். மாதம் இவ்வளவு இலாபம் வருகிறது அதில் இருந்து கடை வாடகை பணியாளர் சம்பளம் என்று மிகுதி அண்ணளவாக மாதம் மாதம் இவ்வளவு பணம் மிஞ்சுகிறது என்று தெரிந்தும் வரி அறவிடுகிறோம் என்று கூறி அடாத்தாக பணத்தைப் பறிக்கிறார்கள் என்று வியாபரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவர்கள் எவரிடம் சென்று முறையிட முடியும் கடையைப் பூட்டுவதைத் தவிர.
வியாபார நிலையங்களுக்கு சோதனை வரும் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அறக்கொடை நிலையத்தில் இருந்து வரி அறவீடு என்று கூறி பல இலட்சம் ரூபாவை அடாத்தாக பிடிங்கிச் சென்றுள்ளனர். என்றால் அறக்கொடை நிலையம் என்ன வியாபார நிலையமா என்ற கேள்வி எழுகிறது. யாழில் உள்ள வீரரைப் போற்றும் பெயரில் உள்ள ஒரு அறக்கொடை நிலையத்துக்கு இந்த சோதனை வந்துள்ளது. இந்த நிலையத்தை திறந்தவர் யாழில் இருந்து ஜரோப்பிய நாடொன்றிற்குச் சென்று வாழ்ந்து வரும் ஒருவராவர். இவர் தனது உழைப்பை தனது மண்ணில் போரால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்க முன்வந்தவர். இவர் மக்களுக்கு உதவி செய்வது இந்த வரி அறவிடுகின்றவர்களால் இல்லாமல் போகுமோ என்ற ஜயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வரி அறவிடச் செல்பவர்கள் ஒரு இடத்தை கைப்பற்றப் போகும் இராணுவம் போல் வித்தியாசம் தெரியாமல் எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பவர்களா. என்று மக்கள் கேட்கின்றனர். தமக்கு உதவி செய்ய வந்த மகானுக்கு இப்படி கேடு செய்தால் அவருக்கு எப்படி யாழ்ப்பாணம் வர மனம் வரும். அவர் உதவி செய்ய வேண்டிய கட்டாய தேவையில்லை. இதனால் பாதிக்கப்படுவது அவரல்ல மக்கள்.
மாதம் மாதம் பல இலட்சம் ரூபாவினை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கி வருகிறார். அது மட்டுமா வருடா வருடம் தனது பிறந்தநாளில் அதாவது அன்றைய நாள் மட்டும் ஒரு கோடி ரூபாவினை மக்களுக்கு வழங்கி வருகிறார். அவர் மக்களுக்கு என்னென்ன உதவிகள் வழங்குகிறார் என்ற விபரத்தை யாழில் வரும் சகல பத்திரிகைகளிலும் விளம்பரத்தின் மூலம் வெளிப்படுத்துவார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட மகானை உதவி செய்யவிடாது தடுக்கும் வரி அறவிட்ட இந்த திணைக்களத்தால் மக்களுக்கு என்ன பயன்.
யாழில் இலட்சக் கணக்கில் வருமானம் எடுக்கும் பொது நிகழ்வு மண்டபங்களுக்கு வரி அறவிடுவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்துள்ளார். யாழில் தடுக்கி விழும் இடமெல்லாம் பொது மண்டபங்கள். இந்த மண்டபங்களில் திருமண வைபவங்கள் பூப்புனித நீராட்டு விழா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்று நிகழ்வுகளை செய்யும் மக்களிடம் இலட்சக் கணக்கில் பணம் வசூலிக்கும் மண்டப உரிமையாளரிடம் அதற்கேற்ப வரி அறவிடுவதில்லை. மக்களுக்கு உதவி செய்ய வந்த இவரிடம் வரி அறவிட்டது மக்களுக்குத் தான் பாதிப்பு.
வரி அறவிடுகின்றவர்கள் தமது வேலையை சரியாகச் செய்தால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமல்ல மக்களின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் இரண்டையும் கட்டியெழுப்பினால் மட்டுமே இலங்கை அபிவிருத்தி அடைவதற்கான சாதியக்கூறுகள் எழக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும் இல்லாது போனால் வரி அறவிடும் திணைக்களத்தின் செயற்பாடு என்ன என்ற கேள்வி எழும்.