இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவின் பிரபல பெற்றோலியக் கம்பனியான பெற்றோனாஸ் (PETRONAS ) கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டற்றுக் வான் சுல்கிபீ வான் அறிபின் ( Datuk Wan Zulkifee Wan Ariffin )உள்ளிட்ட பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி; இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமது கம்பனி இலங்கைக்கு எரிவாயு மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை வழங்கியுள்ள போதிலும் இலங்கையுடன் நீண்டகால திட்டங்கள் இல்லாதிருப்பதனால், இலங்கையுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் நோக்குடன் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக டற்றுக் வான் சுல்கிபீ தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமாதான சூழல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருத்தமானது என்பதனால், பெற்றோனாஸ் போன்ற உலக அங்கீகாரம் பெற்ற கம்பனியொன்று நாட்டில் முதலீடு செய்தால், அது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.